ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆக 14, 2026 - 20:00
புதுப்பிக்கப்பட்டது: 17 நாட்கள் முன்பு
0 3
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கச்சத்தீவு - மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதுறையில் இருந்து புதன்கிழமை மீன்வளத்துறை அனுமதியுடன் 279 படகுகளில் 2,200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு - மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த வெலிங்டனுக்கு சொந்தமான விசைப்படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

படகில் இருந்த ஜனதன் (45), அந்தோணி (38), பிரபு (43), டொன்போஸ்கோ (55), ஆரோக்கிய டெவின் (31), வெள்ளிச்சாமி (51), சுப்பையா (52), ஆரோக்கிய ஜெனிஸ்டன் (25), ஸ்டெலின் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து மீனவர்கள் 9 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர் சங்கம் கோரிக்கை

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் எதிர்வினை என்ன?

பிடிக்கும் பிடிக்கும் 0
பிடிக்கவில்லை பிடிக்கவில்லை 0
அன்பு அன்பு 0
வேடிக்கையானது வேடிக்கையானது 0
ஆஹா ஆஹா 0
வருத்தம் வருத்தம் 0
கோபம் கோபம் 0

கருத்துகள் (0)

User